Wednesday 18 July 2012

பாபநாசம் (PAPANASAM)


      “அழகான கடற்கரை, எண்ணற்ற பூங்கா, ஊரின் அழகை காண ஓர் உயர் கோபுரம் (Tower)” இவை எதுவும் இல்லை, ஆனாலும் பாபநாசம் அழகு! (இவை மட்டும் தான் அழகு என்பதில்லை.)  இங்கு இருப்பவை பல பல.  எங்கு பார்த்தாலும் வயல் வெளி, எப்போதும் பரபரப்பான சாலை, அண்ணா கடை அல்வா, மிக நீண்ட புகைவண்டி நிலைய நடைமேடை, 108 சிவாலயம், சீனிவாச பெருமாள் கோவில், பாலைவனநாதர் ஆலயம்,வடக்கே அடுத்தடுத்த நான்கு ஆறுகள், பாசலா தியேட்டர் இப்படி பல பல.  பாபநாசத்திற்கு பெயர் காரணம் இரண்டுண்டு.
     அருள்மிகு இராமலிங்க சுவாமி திருக்கோயில்(108 சிவாலயம்) தலவரலாற்றில், “இலங்கையில் இராவணனை சம்ஹாரம் செய்த தோஷம் அகல இராமேஸ்வரத்தில் மூழ்கிவிட்டு ஸ்ரீராமர், சீதாபிராட்டி, இலக்குவனன், ஸ்ரீ அனுமன் திரும்பும் வழியில் குடமுருட்டி ஆற்றின் அருகே தென்னை மரங்கள் அடர்ந்த இந்த பகுதியை (பாபநாசம்) அடைந்தனர்.  அப்போது தங்களை ஏதோ தோஷம் பின் தொடர்வதை உணர்ந்து சீதை இராமபிரானிடம் முறையிட்டார்.  இராவனனின் தங்கை சூர்ப்பனைகையுடன் பாதுகாவலர்களும், அரக்கர்களுமான ஹரன், தூஷன் ஆகியோரை சம்ஹாரம் செய்ததை நினைவு கூர்ந்து, அத்தோஷமே தங்களை பின் தொடர்ந்து வருகிறது என்பதை உண்ர்ந்தார் இராமபிரான்.  அப்போது குடமுருட்டி ஆற்றின் அருகே வில்வ மரத்தை கண்டார்.
     தோஷம் அகல சிவலிங்க பூஜை செய்வதே உத்தமம் என்று தீர்மானித்தனர்.  உடனே சீதாபிராட்டி அனுமனை காசிக்கு விரைவாக சென்று சிவலிங்கம் கொண்டு வரப்பணித்தார்.  காசி சென்ற அனுமன் திரும்பும் வரையில் சீதாபிராட்டி குடமுருட்டி ஆற்றில் மூழ்கி ஈரமணலை எடுத்து வரிசையாக சிவலிங்கங்களை செய்யலானார்.
     ஸ்ரீ இராமபிரான், இலக்குவனன் ஆகியோரது பெருமுயற்சியால் சீதாபிராட்டி தமது கரங்களாலேயே நூற்றுக்கும் மேற்பட்ட மணல் லிங்கங்களை உருவாக்கினார்.  ஸ்ரீ அனுமன் காசியிலிருந்து திரும்பும் முன்னரே வில்வ மரத்தடியில் பக்தி பரவசமுற்று சிவலிங்க பூஜையை துவங்கிவிட்டனர்.  காசியிலிருந்து வந்த அனுமன் சிவலிங்கத்தை வெளி பிரகாரத்தில் வைத்துவிட்டார்.  தான் வருமுன்பே பூஜை தொடங்கி பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதைக் கண்ட ஸ்ரீ அனுமன் மூலவரான ஸ்ரீ இராமபிரான் பிரதிஷ்டை செய்த இராமலிங்கத்தை பெயர்தெடுத்துவிட்டு தான் கொண்டு வந்த காசிலிங்கத்தை மூலவராக பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்ற நோக்குடன் தான் என்ற ஆணவத்துடன் இராமலிங்கத்தினை (மூலவரை) தன் வாலால் கட்டி இழுக்கும் போது வாலறுந்து வடக்கே சென்று வீழ்ந்தார்.  (வாலறுந்து வீழ்ந்த இடமானது இன்று அனுமனாநல்லூர் என்று வழங்கப்படுகிறது)  ஒரு கனம் சினம் கொண்டதற்குத் தக்க தண்டனை பெற்ற ஸ்ரீ அனுமன் இராமபிரான் பாதம் பணிந்தார்.
     அனுமன் கொண்ட கோபத்திலும் நியாயம் இருப்பதை உணர்ந்த ஸ்ரீ இராமபிரான் ஸ்ரீ அனுமனிடம் இங்ஙனம் திருவாய் மலர்ந்தருளினார்.  இவ்விடம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த 107 சிவலிங்கங்களையும் வழிபட்டாலும் பின்னர் 108வது சிவலிங்கமான ஹனுமந்த லிங்கத்தையும் வழிபட்டு பின்னர் அம்பாளை வழிபட்டாலே முழுபலன் கிட்டும், தோஷம் நீங்கப்பெறும் என்றார்.
     அந்நாள் முதல் மனிதப்பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் பாபவிநாசம் (பாபநாசம்) என்று அழைக்கப்படும் என்று அருள்வாக்கு அருளினார்.
     ஸ்ரீ பங்கஜவல்லி சமேத பாபவினாசபெருமாளின் பெயராலும் இவ்வூர் பாபநாசம் என்று அழைக்கப்படுகிறது.